இலங்கை – பாகிஸ்தானுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பாகிஸ்தானிய பிரதமருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் இஸ்லாமாபாத் நகரிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன், பின்னர் நடைபெற்ற இரு தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச பயிற்சி நிறுவனத்திற்கும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்குமிடையிலான ஒப்பந்தத்தில் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் பாகிஸ்தானின் வெளிநாட்டு செயலாளரும் கைச்சாத்திட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய பாடசாலைக்கும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றில் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரும் பாகிஸ்தானின் தேசிய கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரியின் பீடாதிபதியும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தமொன்றில் பாகிஸ்தானின் மாநில கூட்டுறவு இராஜாங்க அமைச்சின் செயலாளரும் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரும் கைச்சாத்திட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Trending Posts