அரசியல் உரிமை கிடைப்பது சந்தேகமே – வடக்கு முதல்வர்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தமிழ் மக்களின் அரசியல் தேவைகளைப் பொருட்படுத்தாது பெரும்பான்மை அரசாங்கங்கள் முன்வைக்கும் கருத்துக்களே பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமுமென மத்திய அரசாங்கம் தெரிவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் பொருளாதார விருத்தி ஏற்படும் பட்சத்தில், அது நல்லிணக்கத்திற்கு வித்திடும் என்ற சிலரின் கூற்றுக்கு பதில் வழங்கும் வகையில், வட மாகாண முதல்வரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்கு தேவையான பணத்தை வழங்குகின்றோம், பொருளாதார விருத்தியை ஏற்படுத்துவோம், அதனூடாக நல்லிணக்கம் பிறக்குமென சிலர் கூறுவதாகவும், இவற்றை வழங்கும் போது, தனியுருத்துக்களைக் கேட்க வேண்டாம் என கூறவது தான் மத்திய அரசாங்கத்தின் கருத்து எனவும் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

பணம் கொடுத்து வாங்கிவிட்ட பின்னர் அவர்களின் விரும்பம் போல நடப்பதே நல்லிணக்கமென அவர்கள் நினைப்பதாகவும் முதலமைச்சரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுடன், வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு பொருளாதார ஏற்றம் முக்கியமானது எனவும், தமது தேவையின் நிமித்தம் இவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்குள் மக்கள் வீழ்கின்ற போதிலும், முன்னோக்கிய சிந்தனை அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார விருத்தியைப் கண்டு ஏமாறும் பட்சத்தில் ,வடக்கை அடிபணியச் செய்து எமது வளங்களை சூறையாடி, சிங்கள குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தி, இறுதியில் அரசியல் உரிமைகளைத் தராது விடுவார்கள் எனவும் வட மாகாண முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.