அலுவலகம் இல்லாத நிலையில் காணாமற்போனோர் தொடர்பான பணியகம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

காணாமல்போனோர் தொடர்பான பணியகத்துக்கு அலுவலகம் ஒன்று இல்லையென அதன் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான பணியகம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையாலும், சர்வதேச நாடுகளினாலும், ஜெனீவா கூட்டத்தொடரில் கருத்துகள் வெளியிடப்பட்ட நிலையில், பணியகத்தின் நியமனத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து கரிசனை வெளியிடப்பட்டதுடன், அதன் பணிகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி, காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் செயற்பாடுகள் தொடர்பில், அதன் தலைவரிடம் வினவப்பட்ட போது, காணாமல்போனோர் தொடர்பான பணியகத்துக்கு நிரந்தர அலுலகம் ஒன்று இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் கொழும்பு நாவல பகுதியில் தற்காலிக அலுவலகம் ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணியகத்தின் செயலாளராக முன்னாள் தேசிய பொருளாதார அமைச்சின் செயலாளர் எம்.ஐ.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நான்கு, ஐந்து தடவைகள் ஆணைக்குழு சந்திப்புக்களை நடத்தியுள்ளதுடன், திட்டமிடல்களும் இடம்பெற்று வருவதாகவும், விளம்பரப்படுத்தி, கேள்விக்கோரல் விடுத்து நிரந்தர அலுவலகம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.