இந்தியா தமது ஆட்சியைத் தவறாகவே புரிந்திருந்தது – முன்னாள் ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இந்திய அரசாங்கம் தமது ஆட்சி தொடர்பில் தவறான புரிந்துணர்வில் இருந்தாகவும், தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்தபோது, அவ்வாறானதொரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு போதிய காலம் இருந்திருக்க வில்லை என்றும், காங்கிரஸ் கட்சியுடன் போன்று பாரதீய ஜனதா கட்சி அரசுடனும், சிறந்த ஒத்துழைப்பை ஏற்படுத்த தாம் திட்டமிட்டிருந்தபோதும், 2015இல் ஆட்சியில் இருந்து வெளியேற நேர்ந்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் ஆட்சி சீனாவில் உருவாக்கப்பட்டதன் பின்னர், அந்த நாட்டுடன் இலங்கை மிகவும் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ள போதிலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்கும் பணிகளை முன்னதாக இந்தியாவுக்கே தாம் வழங்கிய போது, இந்தியா அதனை நிராகரித்ததாகவும், அதன் பின்னரே சீனாவிடம் அதனை வழங்கியதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாத காரணத்தால், எவ்வாறு செயற்படுவீர்களென எழுப்பப்பட்ட கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கும் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செயற்பட்டமை போன்றே, இதன்போதும் தாம் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றினால், தெரிவு செய்யப்படும் வேட்பாளருக்கு ஆதரவாக தாம் பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.