ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஆளுனருடன் சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை கொழும்பில் சந்தித்துள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பின் போது குறித்த குழந்தைகள் சார்பில் அவர்களது தந்தையின் விடுதலை கோரி ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதி வெளிநாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், அவர் நாடு திரும்பியதும் குறித்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவிலும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.