தேசியப் பாதுகாப்பிற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் – இராணுவத் தளபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வடக்கின் காணி விடுவிப்பில் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிமலை நல்லிணக்க வீட்டு திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 25 பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், யாழ்ப்பாணத்திலுள்ள பொதுமக்களின் அனைத்து காணிகளையும் எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு பரிசாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தம்மிடம் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, பருத்தித்துறை முதல் காங்கேசன்துறை வரையான வீதியை பொதுமக்களின் பாவனைக்கு ஏற்கனவே விடுவித்துள்ள போதிலும் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை மாத்திரம் அதில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பம் முதல் குறித்த வீதி ஊடாக பொதுமக்களின் வாகனங்களும் பயணிக்க முடியும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.