தவறுகளை மறைக்க நாம் கூட்டுச் சேரவில்லை – ஈ.பி.டி.பி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தவறுகளை மறைக்கவோ தப்பிக்கொள்ளவோ யாருடனும் கூட்டுச் சேரவில்லை. அவ்வாறு எம்மீது கறைகள் இருப்பின் மாகாண சபை ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் மூலம் அதை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாமேயென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ். மாநகர உறுப்பினருமான கா. வேலும்மயிலும் குகேந்திரன் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எமது ஆளுகைக்குள்ளிருந்த யாழ். மாநகர சபையின் நிர்வாக அலகுகளில் முறைகேடுகள் இருந்ததாகவும் அதை கண்டுபிடிக்க யாழ். மாநகர சபையின் புதிய ஆட்சியாளர்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

யாழ் மாநகர சபை உள்ளிட்ட வடமாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் வடக்கு மாகாண சபையின் ஆளுகையின் கீழ் குறிப்பாக முதல்வர் விக்னேஸ்வரனின் கீழ் தான் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. குறித்த காலப்பகுதியில் இரண்டு ஆணைக்குழுக்களை அமைத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தியிருந்த போதிலும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றங்களும் அந்த குழுக்கள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.

வடக்கு மாகாண சபையை விக்னேஸ்வரன் பொறுப்பேற்று அதன் ஆட்சிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுறும் தறுவாயிலுள்ள நிலையில் தனது ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட குறித்த சபையின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கலாம்.

அதை விடுத்து ஒருசில ஆட்சி பொறுப்புக்களை தான் கைக்கொண்டுள்ள கட்சியின் தரப்பினர் நிர்வகிக்க முடியாது போனமையால் அதிருப்தியுற்று எம்மீது வழமைபோன்று அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை அள்ளி வீசும் நிலையில் வடக்கு மாகாணசபையின் தனது ஆட்சிக்கு கீழ் இயங்கிய அமைச்சர்கள் ஊழல் செய்ததை விசாரித்த முதல்வர் ஊழல் வாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு பதவிகள் பறிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் மீது இதுவரை எதுவிதமான சட்ட நடவடிக்கையினையும் ஏன் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மட்டும் மக்களுக்காக சேவை செய்பவர்கள் மீது சேறு பூசுவது நியாயமற்று. நாம் யாழ். மாநகர சபையில் கொண்டுவரும் முதற் பிரேரணையே கடந்த கால ஆட்சியில் நடைபெற்றதாக கௌரவ முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள முறைகேடுகள் தொடர்பான பிரேரணைதான்.

அதனூடாக அவர்கள் வெளிப்படையான தன்மையுடன் அதை ஆராய்ந்து முறைகேடுகளை கண்டுபிடித்து வெளிக்காட்டட்டும் என்று தெரிவித்த ரெமீடியஸ் அந்த வெளிப்படையான விசாரணைகளுக்கு அன்றைய முதல்வரும் இன்றைய யாழ். மாநகர உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜா இடையூறாக இருந்தால் அவரை அக்காலப்பகுதியில் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஒதுங்கியிருக்கவைத்து நாம் முழுமையான ஒத்துழைப்பை அந்த விசாரணைக்கு வழங்க தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.