வடமாகாண சபை உறுப்பினர்கள் போராட்டத்திற்குத் தயார்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர மற்றும் வெலிஓயா, கிதுள் ஓயா பகுதிகளில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடமாகாண சபையினர் முன்னெடுக்க வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக, எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

வடமாகாண சபையின் 120ஆவது விஷேட அமர்வு இன்று பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகிய போது, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கல்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற பிரேரணையினை முன்மொழிந்தார்.

இந்தப்பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றபோது, உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களை எதிர்த்தும் அவற்றினை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டதுடன், தமிழர் சுதந்திரத்தினைப் பறித்து மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வழி சமைக்க வேண்டாமென்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

இதன்பின்னர், உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பின்னர், எதிர்வரும் 10ஆம் திகதி காலை 9.00 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான வடமாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று வெலிஓயா மற்றும் கிதுள்ஓயா உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிடுவதுடன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •