புதிய கட்சியை உருவாக்க காலம் வந்துவிட்டது

சிறப்புச் செய்திகள் செய்திகள்

அடுத்த தேர்தலில் தாம் போட்டியிட வேண்டுமென பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய கட்சி ஒன்றை தொடங்குவதற்குரிய காலம் கனிந்து விட்டதோ எனத் தாம் அறியேன் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படமாட்டாரென கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடகிழக்குக்கு தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். எனினும், அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, தாம் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் அதன் தலைமைத்துவத்தின் தவறான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டவே நடவடிக்கைகள் எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.