சிரியா தொடர்பில் பிரெஞ் ஜனாதிபதியின் வலியுறுத்தல்

உலகச் செய்திகள்

சிரியாவில் இருந்து படையினரை வெளியேற்ற வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியதாக பிரெஞ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சிரியாவில் உள்ள அமெரிக்க படையணியினரை மிக விரைவில் தாயகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி 10 நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவர் அப்படியாக தெரிவித்திருந்த போதிலும், நேற்று முன்தினம், அமெரிக்காவின் தலைமையில் பிரித்தானியா மற்றும் பிரெஞ் படைகள் இணைந்து சிரிய அரசாங்கத்தின் நிலைகள் மீது வான் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

அப்போதும், தாம் வான் தாக்குதலை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் பிரெஞ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரேஞ் ஜனாதிபதியின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சண்டேர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் இருந்து அமெரிக்க படையணிகள் வெளியேறுவது தொடர்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றாக அழிக்கப்படுவரென ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், அமெரிக்க படையணிகள் விரைவில் தாயகம் திரும்புவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கிழக்கு சிரியாவில் 2,000 அமெரிக்க துருப்பினர் செயற்படுவதுடன், அவர்கள் குர்திஷ் மற்றும் அரேபிய போராளிகளின் ஆயுத அமைப்பான சிரியன் ஜனநாயக படையணியினருக்கு ஒத்துழைப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.