மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான தகவல்களை தொடர்ந்தும் ஒழுக்க விதிமுறையுடன் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற முன்னேற்ற மதிப்பீட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ள அதேவேளை, 2019ஆம் ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை குறித்தும் நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டது.

புள்ளிகள் வழங்கும் நடைமுறை மற்றும் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் வதிவிடம் குறித்த தகவல்களை சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பிள்ளைகளின் தகைமைகள் தொடர்பிலான தகவல்களை பகிரங்கப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் போது இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதே இதன் நோக்கம் என்றும், போலியாக தயாரிக்கப்படும் ஆவணங்களை பயன்படுத்தி மாணவர்களை பாடசாலைக்கு சேர்த்துக்கொள்வதற்காக பெற்றோர் முயற்சிப்பதன் காரணமாக தகுதிகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றுநிரூபத்தில் சில மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.