காணாமற் போனவர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களில் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லிணக்க ஒருங்கிணைப்பு பொறிமுறைக்கான செயலகம் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

தாய், தந்தை மற்றும் குடும்பத் தலைவர்கள் என 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 40 வீதமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன், 18 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட 38 வீதமானோரும், 17 வயதுக்குட்பட்ட 9.8 வீதமானோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்கள் நிலைமை என்ன என்று தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளதாக அந்த செயலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஆயிரம் முதல் 2 ஆயிரத்துக்கு இடைப்பட்டோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, கண்டி, அநுராதபுரம் மற்றும் குருநாகல் முதலான மாவட்டங்களில் 501 முதல் ஆயிரம் பேரிற்கு இடைப்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

மன்னார், வவுனியா, பதுளை, கேகாலை, கொழும்பு, களுத்துறை, பொலனறுவை, காலி, மாத்தறை மற்றும் கம்பஹா முதலான மாவட்டங்களில் 251 முதல் 500 க்கு இடைப்பட்டோரும், மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை, புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை முதலான மாவட்டங்களில் 100 இற்கும் 250 இற்கும் இடைப்பட்டோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்க ஒருங்கிணைப்பு பொறிமுறைக்கான செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.