ஜனாதிபதியின் வர்த்தமானியால் சிக்கல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தும் பொருட்டு ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் குறிப்பிடப்படாமையினால் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

இதன் காரணமாக அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் குறிப்பிட்டு புதிதாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாடு திரும்பியதன் பின்னர் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவாரென நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நிறைவுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது. அதில் நாடாளுமன்றத்தில் இரண்டாவது அமர்வு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகுமென குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஆரம்பிக்கப்படும் நேரம் குறிப்பிடப்படவில்லை. இருந்த போதிலும், இதற்கு முன்னரும் இதுபோன்ற வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகியுள்ளதாகவும் நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல மேலும் தெரிவித்துள்ளார்.