பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

25ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு லண்டனில் இன்று நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் தலைமையில் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

பொது எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் இம்முறை இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளதுடன் 53 நாடுகளின் அரச தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

சுகாதாரம், பாதுகாப்பு, நீதி மற்றும் நிலையான அபிவிருத்தி போன்ற விடயங்களை இலக்காகக் கொண்டு, அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இம் முறை மாநாட்டில் விஷேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பொதுநலவாய அமைப்பின் தலைவராக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நியமிக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை அவர் இந்த பதவியை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கைக்கான உதவிகளை மேலும் விரிவுப்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடும் போது பிரித்தானிய சர்வதேச வர்த்தக அமைச்சர் லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகள் இடையிலும் புதிய வர்த்தக மற்றும் முதலீடுகளை விஸ்தரிப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மீதான வெளிநாடுகளின் முதலீடு அதிகரிப்பதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்தியை இலக்காக கொண்டு மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.