அரசிலிருந்து முழுமையாக வெளியேறினாலேயே சாத்தியமாகும்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்பிடம் இருந்து பறிப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தெரிவானவர்களே, தேசிய அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சி, எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது எனவும், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவர்களுக்குக் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.