மே 18 துக்கதினம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18ஆம் திகதி தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் 122வது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமான போது, சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசதிரன் இந்தப் பிரேரணையினை முன்மொழிந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களின் இனஅழிப்பு தினமான மே 18ஆம் திகதியினை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யுமாறு சபையில் கோரிக்கை விடுத்ததுடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18ஆம் திகதியினை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறும் கோர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

சபையில் சகல உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதன் பிரகாரம், மே 18ஆம் திகதியினை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்வதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.