பிரித்தானிய ரகர் வீரர் இலங்கையில் மரணம்

செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய நாட்டு ரகர் வீரர் ஒருவர் அவசர நோய் நிலைமையின காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

நட்புறவு ரகர் போட்டியொன்றில் பங்கேற்க கடந்த 10ஆம் திகதி 22 பேர் கொண்ட பிரித்தானிய ரகர் அணி இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், கடந்த 12ஆம் திகதி கொழும்பில் உள்ள விளையாட்டரங்கு ஒன்றில் போட்டிகள் நடந்துள்ளதாகவும் பின்னர் குறித்த வீரர்களுக்கு இரவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விருந்தை முடித்துவிட்டு பிரித்தானிய வீரர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வருகை தந்ததுடன், பின்னர் அவர்கள் மறுபடியும் கொள்ளுப்பிட்டியில் உள்ள களியாட்ட விடுதியொன்றிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த களியாட்ட விடுதியில் இருந்து அதிகாலை 4.00 மணியளவில் அவர்கள் தங்களது விடுதிக்கு வந்தபின்னர் குறித்த வீரர்களில் இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று (13) பிற்பகல் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடைய ஹவாட் தோமஸ் அன்ரூ என்பவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.