இலங்கை – ஈரான் இடையே உடன்படிக்கைகள்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் 5 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஈரான் ஜனாதிபதி ஹசன் றெளஹானிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை புதிய பாதையில் முன்நோக்கி கொண்டு செல்வது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, மசகு எண்ணெய், தேயிலை மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், எண்ணெய் சுத்திகரிப்பு துறையை நவீனமயப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகள் குறித்தும். சுகாதார துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி இரு நாடுகளுக்கும் இடையில் மருத்துவ பொருள் பரிமாற்றம் தொடர்பாகவும், ஆடைத் தொழிற்துறை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் 05 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், தரப்படுத்தல், அளவையியல் பயிற்சிகள். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் போன்ற துறைகளுடன் தொடர்புடைய விடயங்கள் இவற்றில் உள்ளடங்கியுள்ளன.