புதிய எரிபொருள் அறிமுகத்திற்குத் தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தற்போது விற்பனை செய்யப்பட்டுவரும் சூப்பர் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகிய இருவகை எரிபொருட்களையும், சந்தையிலிருந்து அகற்றிவிட இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இவ்விரண்டுக்குப் பதிலாக, சர்வதேசத் தரம்வாய்ந்த எரிபொருள் வகையொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ள நிலையில், அந்த எரிபொருள் யூரோ ஃபோ என்றழைக்கப்படும் சூப்பர் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசலாகக் காணப்படுகின்றது.

யூரோ ஃபோ எனும் எரிபொருளானது, சர்வதேச ரீதியில் உயரிய நம்பிக்கைக்குரிய எரிபொருளாகக் காணப்படுகின்றது. இதில் எந்தவகையான கழிவும் கலக்கப்படவில்லையென இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிமுதல், இந்த யூரோ ஃபோ ரக எரிபொருளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக சூப்பர் பெற்றோல் லீற்றரொன்று, தற்போது 148 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், சூப்பர் டீசல் லீற்றரொன்று, புதிய விலைப்படி 119 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள யூரோ ஃபோ ரக சூப்பர் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசலின் விலைகள், தற்போது சந்தையில் நிலவும் சூப்பர் எரிபொருட்களின் விலைகளை விட அதிகமாகக் காணப்படுமென கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.