மானியக் கொடுப்பனவு வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மண்ணெண்ணெய் மானிய கொடுப்பனவு தொகையை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, குறைந்த வருமானம் பெறும் மின்சார வசதியற்ற குடும்பங்கள் மற்றும் மண்ணெண்ணெயில் இயங்கும் மீன்பிடி படகுகளை உபயோகிக்கும் மீனவர்களுக்கு, மண்ணெண்ணெயை மானியமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மண்ணெண்ணெய் மானிய கொடுப்பனவு தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான தகவல்களை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மண்ணெண்ணெய் விலை மாற்றமடைந்த திகதியிலிருந்து மானிய நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.