பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட தினமான கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, 10 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாங்கத்தினால் அன்றைய தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதன்போது, எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தல் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து அன்றைய தினம் நள்ளிரவு விலை அமுலுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில், புதிய எரிபொருள் விநியோகம் மற்றும் அதற்கான விநியோக கேள்வி தற்காலிகமாக நிறுத்தப்படும்.

குறைந்த விலையில் எரிபொருள் விற்பதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற போதிலும், கடந்த 10ஆம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளான கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல ஆகியவற்றிலிருந்து 74 எரிபொருள் கொள்கலன்கள் எரிபொருளை நிரப்பி, விநியோகித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து 55 எரிபொருள் கொள்கலன்களும், முத்துராஜவெலவிலிருந்து 22 எரிபொருள் கொள்கலன்கள் வெளியேறியுள்ளதனால், கொலன்னாவைக்கு 65,80,200 ரூபா நஷ்டமும் முத்துராஜவலைக்கு 24,68,400 ரூபா நஷ்டமும் ஏற்பட்டடுள்ளது.

முதற்கட்ட விசாரணனைக்கமைய அன்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பாரிய தொகையளவு எரிபொருள் கேள்வியை விடுத்திருந்தது. ஒருவாரமாக எரிபொருள் நிரப்பாமல் இருந்த சில எரிபொருள் நிலையங்கள் அன்றைய தினம் எரிபொருளை நிரப்பியுள்ளது.

பணம் செலுத்திய சிலர் எரிபொருளை பெறவில்லை ஆனால் அன்றைய தினம் பதிவு செய்தவர்கள் எரிபொருளை பெற்றுள்ளனர். இதுத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.