10 மாவட்டங்களில் பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாட்டில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்று வரை 10 மாவட்டங்களைச் சேர்ந்த 8,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால், அவ்வாறான பிரதேசங்களில் சூறாவளி வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்நிலையம், மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, ஏதாவது அனர்த்தம் ஏற்படபோகிறதென கண்டறிந்தால், அவைதொடர்பில், 117க்கு உடனடியாக அறிவிக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சீரற்ற வானிலையால், காலி மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில், போபே பொத்தல, அக்மீமன உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 1,960 குடும்பங்களைச் சேர்ந்த 7,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை, இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காற்று, மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்பதனால், கடலுக்குச் செல்லும் மீனவர்களும் கடற்படையினரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

கடுமையான மழை பெய்வதனால் அதிவேக நெடுஞ்சாலைகளில், வாகனங்களின் போக்குவரத்து வேகம், மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சீரற்ற வானிலையால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு, இராணுவத்தினர் உஷார் நிலையில் இருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.