மக்களின் வலிகளும், துயரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யுத்தம் தொடர்பான எந்த ஒரு விளக்கமும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வலிகளும், துயரங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லையென காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் கடந்த சனிக்கிழமை காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை நடத்தியப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளதுடன், யுத்தம் தொடர்பான பல்வேறு விளக்கங்கள் இருக்கின்ற போதிலும், அவை எவையும் யுத்தத்தின் இன்னொரு விளைவாக மக்கள் அனுபவித்த துயரங்களை முழுமையாக வெளிப்படுத்தத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போனோர் அலுவலம் 12 பிராந்திய அலுவலகங்களை ஆரம்பிக்கவுள்ள அதேநேரம், 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறையான பதிவுப் பட்டியல் எதுவும் இல்லாத நிலையில், தமது அலுவலகம் நடத்தும் விசாரணைகளின் அடிப்படையில் விபரத்தரவுகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.