மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்களே இன்று நீலிக் கண்ணீர் வடிப்பது வேதனைக்குரியது – டக்ளஸ்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

எமது மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்கள், கொண்டு செல்ல துணை போனவர்கள், கொல்லக் கொடுத்தவர்கள் இன்று அங்கு சென்று அரசியல் கண்ணீர் வடிப்பது வேதனைக்குரிய விடயமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டத்தின் கீழான இரு கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், உறவுகளை பலி கொடுத்த வலியை சுமக்கும் மக்களில் நானும் ஒருவன். எனது உடன் பிறந்த ஒரு சகோதரனையும் ஒரு சகோதரியையும் மட்டுமல்லாது என்னுடன் தோழோடு தோள் நின்ற பல தோழர்களையும் நெருக்கமான உறவுகள் பலரையும் இந்த உரிமைப் போராட்டத்தில் பலி கொடுத்த இழப்பின் துயரங்களை நானும் அனுபவிப்பவன்.

அந்த அனுபவங்களுக்கு ஊடாகவே உரிமையை வெல்வதற்கான எமது பாதையை நாம் செப்பனிட்டுக்கொண்டவர்கள். பலியாகிப்போன அனைத்து உறவுகளுக்கும் அனைத்து இயக்க போராளிகளுக்கும் நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது, இழப்புகளை சொல்லி அழுது கொண்டிருப்பதல்ல. இழப்புகளை வைத்து அரசியல் நடத்துவதும் அல்ல,.மாறாக,. உறவுகளை பறி கொடுத்து வலி சுமந்த எமது மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதே ஆகும். அந்தவகையில் உயிரிழந்த உறவுகளை அவர்கள்தம் உறவுகள் நினைவு கூருவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், அதை சுயலாப அரசியலாக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

தங்களது உயிரிழந்த உறவுகளை சுதந்திரமாக நினைவு கூருவதற்கு ஒரு கால கட்டத்தில் தென்பகுதியால் விடுக்கப்பட்டிருந்த தடைகள், இடையூறுகள் தளர்ந்து, இன்று வடபகுதி சுயலாப அரசியல்வாதிகளால் அந்தத் தடைகள், இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்ற நிலையே உருவாகியுள்ளது.

வடக்கின் அரசியல்வாதிகள் நினைவு கூருவதற்கு அழைத்தால் அவர்களது சகாக்கள் நான்கைந்து பேரே போவார்களே அன்றி, எமது மக்கள் போகமாட்டார்கள். எனவேதான், எமது மக்கள் போகின்ற இடங்களைப் பார்த்து வடக்கு அரசியல்வாதிகள் வலுக்கட்டாயமாக நுழைந்து, யதார்த்தபூர்வமற்ற வகையில், செயற்கைகத்தனமாக, எமது மக்களின் உணர்வுகளைத் தூண்ட முயற்சித்துக் கொண்டு, தங்களது சுயலாப அரசியலை முன்னெடுக்கப் பார்க்கிறார்கள். இதனை தென்பகுதி சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில், தங்களது சுயலாப அரசியலுக்காக சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்து, அது குறித்து கதைத்து, கதைத்தே இந்த நாட்டின் அனைத்து மக்களையும் திசை திருப்பி, தங்களது இலக்குகளை எட்டிவிட முனைகின்ற அனைத்துத் தரப்பு இனவாத அரசியல்வாதிகளினதும் குறுகிய நோக்கங்களை எமது மக்கள் அனைவரும் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா குறித்த உரையின் போது கேட்டுக் கொண்டுள்ளார்.