ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் (Photos)

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும் தாக்குதல்தாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் யாழ். நகரில் மாபெரும் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலங்கள் நடைபெற்றது.

 

நேற்று முன்தினம் அதிகாலை பிரதேச செய்தியாளரும், காலைக்கதிர் பத்திரிகையின் விநியோகஸ்தருமான செல்வராசா இராசேந்திரன் வயது (55) என்பவர் யாழ். கொழும்புத்துறை துண்டிப்பகுதியில் வைத்து 10ற்கும் மேற்பட்டவர்களினால் வாளால் வெட்டுப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், ஊடகவியலாளர் செல்வராசா இராசேந்திரன் மீது வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, அறிவாயுதம் ஏந்தும் பத்திரிகை மீது அழிவாயுதம் ஏந்துவதா, நல்லாட்சி அரசே ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை நிறுத்து, பொலிஸாரின் தாமதம் வன்முறையாளர்களிற்கு ஊக்கம் எழுதுகோளின் நியாயத்திற்கு வாள்வெட்டு தான் பதிலா காலைக்கதிர் பத்திரிகையாளர் தாக்குதலுக்கு உடனடியாக நடவடிக்கை எடு, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு, அரசாங்கத்திற்கும், தாக்குதல்தாரிகளுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக யாழ். ஆஸ்பத்திரி வீதி வழியாக சென்று மீண்டும் யாழ். பஸ் நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த போராட்டத்தில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன், உட்பட வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.