கிரிக்கெட் போட்டி அனுசரணை விடயம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

செய்திகள் விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள போட்டிகளை அறிக்கையிடுவதற்காக, நான்கு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு 2 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையால் குறித்த நான்கு ஊடகவியலாளர்களுக்கும் ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆங்கில மற்றும் மூன்று சிங்கள பத்திரிகை நிறுவனங்களின் ஊடவியலாளர்களுக்கே இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு ஊடக நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய பொறுப்பிலுள்ள ஒருவருக்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஊடகவியலாளர்கள், முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட, விளையாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் விடுத்த அனுசரணை கோரிக்கைக்கு அமைய இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளதுடன், முதலாவது போட்டி எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.