காணாமற் போனவர்களின் பெயர்கள் வெளியிடுவது தொடர்பிலான செய்தியில் உண்மையில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் பெயர்ப் பட்டியலை தாம் வெளியிடத் தயாரென வெளியாகிய செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களையும் சிவில் சமூக அமைப்பினரையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்தித்த காணாமல் போனோர் தொடர்பிலான நிரந்தர அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் அலுவலகத்தின் அமைப்பு ரீதியான திட்டங்களையும் உபாய மார்க்கங்களையும் தெளிவுபடுத்தியிருந்தனர். இருந்த போதிலும், சரணடைந்தோரின், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை குறித்த அலுவலகத்தின் தவிசாளர் வெளியிடப்போவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் பெயர்ப் பட்டியலை தாம் வெளியிடத்த தயார் என சாலிய பீரிஸ் குறிப்பிடவில்லை எனவும் அலுவலகத்தில் அவ்வாறான தகவல்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் கிடையாது என்றே அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.