வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன?

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடக்கு மாகாணம் போதைப் பொருட்களின் கடத்தல் செயற்பாடுகளுக்கு முக்கிய கேந்திரமாக மாறியிருக்கின்ற சூழ்நிலையில், அதன் பாவனையும் எமது பகுதிகளில் அதிகரித்து, பல்வேறு சமூக சீர்கேடுகளை தோற்றுவித்து வருவதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற மதுவரிக்; கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் கடந்த யுத்தம் நிலவிய காலகட்டங்களில் இல்லாதிருந்தன. கடற்றொழில்களில் தடைகள், கடற் படையினரது தீவிர ரோந்து சேவைகள் மற்றும் வடக்கிலிருந்து தென் பகுதிக்கான தரைப் போக்குவரத்து வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் பிரச்சினை அப்போதிருக்கவில்லை.

இப்போது இத்தகைய போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் காரணமாக எமது பகுதிகளில் அதன் பாவனை அதிகரித்து, அதன் காரணமாக பல்வேறு சமூகப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றமை மட்டுமல்லாது, எமது கடற்றொழிலாளர்களுக்கு தங்களது தொழிற்துறைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.

அந்த வகையில், கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றமை, கைது செய்யப்படுகின்றமை போன்ற செயற்பாடுகளும் இடம்பெறும் அதேநேரம், மேற்படி போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளை காரணம் காட்டி, அவற்றைத் தடுக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறப்பட்டு, கடற் படையினர் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தம் வசப்படுத்திக் கொண்டுள்ளமையும், எமது கடற்றொழிலாளர்கள் தங்களது தொழிற்துறைகளை மேற்கொள்வதற்கு இயலாதுள்ளமைக்கு இன்னொரு காரணம் என்றும் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கெனக் கூறப்பட்டாலும் வடக்கின் ஊடான போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் எந்தளவிற்கு இதுவரையில் தடுக்கப்பட்டுள்ளன? என்ற கேள்வியே இன்று இந்த நாட்டில் எழுந்துள்ள பிரதான கேள்வியாக இருக்கின்றது. இன்று இந்த நாட்டில் கிராம மட்டங்களிலிருந்து நகர மட்டங்கள் வரையில் போதைப் பொருள் பாவனை பெருமளவு அதிகரித்துள்ளதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். நாளாந்தம் ஊடகங்களைப் பார்க்கின்ற போது, போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுகின்ற சம்பவங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் நூற்றுக்கு 99 சத வீதமான கைதுகள் நாட்டுக்குள் இடம்பெற்றுள்ளதாகவே தெரிய வருகின்றது. கடத்தப்படுகின்ற நிலையில் கடலில் வைத்துக் கைப்பற்றப்படுகின்ற சம்பவங்கள் இதுவரையில் எத்தனை நிகழ்ந்துள்ளன? என்ற கேள்வி இல்லாமல் இல்லை.

கடந்த காலங்களில் கொள்கலன்களில் போதைப் பொருட்கள் இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் மிகவும் பரபரப்பாக வெளிவந்தன. அதன் பின்னர் என்னவாயிற்று? இன்றுவரையில் கடத்தியவர்கள் யார்? என்று எந்தத் தகவலுமே இல்லாது போய்விட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.