ஜனாதிபதியை ஆதரிக்கப் போவதில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளராக களமிறங்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப்போவது இல்லையென பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாத்திரம் இருக்கவில்லை எனவும், அரசாங்கத்தின் உயர்பீடமும் அவரே எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, ஆகியோர் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி சிறிசேனவை நியமிக்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த பொதுஜன பெரமுனவை போன்ற கொள்கையைக் கொண்ட அரசியல் கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கவுள்ளதாகவும், மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும், மேலும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் இதே நிலைமையை அனுபவிக்கக்கூடாது என்றும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.