ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக கசிவு

இந்தியச் செய்திகள்

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள, சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக (சல்பூரிக்) அமிலச் சேகரிப்புத் தொட்டியிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

குறித்த ஆலையால், சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் 100ஆவது நாளிலும் 101ஆவது நாளிலும், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 13 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆலையை மூடுமாறு தமிழக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, கந்தக அமிலக் கசிவு, சிறியளவில் ஏற்பட்டுள்ளதாகவும், கந்தக அமிலச் சேகரிப்புப் பகுதியில், கசிவொன்று அவதானிக்கப்பட்டது. அது, பிரச்சினையாகத் தெரியவில்லை என்ற போதிலும், முற்பாதுகாப்புக்காக, அதை வேறோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கசிவைத் தொடர்ந்து, ஆலைக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்கப்பட்டபோது, தற்போதுள்ள நிலையில் பாதிப்புகள் இல்லை எனவும், அதனால் மக்களை அச்சப்பட வேண்டாமெனக் கூறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts