இலங்கையில் போர்க் குற்ற விசாரணை உண்டு – அமைச்சர் மனோ

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச மொழிகளுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது என்பதால், இது குறித்து தற்போதைய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும் அமைச்சர் மனோ கணேசன் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க முடியாதென அரசாங்கத்தின் தலைமை கருதுமானால் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டுமென வலியுறுத்திய அவர், வடக்கே இராணுவம் பொதுமக்களின் நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய அரசியல் சாசனம் இயற்றப்படுவது தொடர்பில், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு நடுப்பகுதியில் அதற்கான வரைவு தயாராகிவிடும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.