பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வடமாகாணம் தலைநிமிர்ந்திருக்கும் – டக்ளஸ் எம்.பி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தனி மனிதராகவோ அன்றி ஒருசில உறுப்பினர்களை கொண்டதான அரசியல் பலத்தை கொண்டோ தமிழ் மக்களது முழுமையான தேவைப்பாடுகளையும் அபிலாஷைகளையும் வெற்றிகொள்ள முடியாதென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எமது கரங்களுக்கு முழுமையான அரசியல் பலத்தை மக்கள் வழங்கும் பட்சத்தில் அவர்களது அடிப்படை தேவைகளையும் அபிலாஷைகளையும் மட்டுமல்லாது உரிமையையும் பெற்றுக்கொடுத்து ஒளிமயமான ஒரு வாழ்வியலை எமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க தன்னால் முடியுமென நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீர்மானங்களை இயற்றுவது முக்கியமானதல்ல. அதை நிறைவேற்றி மக்களுக்கானதாக மாற்றி செயலுருக் கொடுப்பதே முக்கியமானதாகும். அந்தவகையில் எமது மக்களின் வாழ்வியலில் மாற்றங்கள் வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அந்தவகையில் எமது அரசியல் பாதையே சரியானதென்று இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களுக்கான தேவைப்பாடுகளை அதிகளவில் பெற்றுக்கொடுக்கக் கூடிய அதிகாரமுள்ள வடக்கு மாகாணசபை எதுவித மக்கள் நலன்களையும் நிறைவேற்றிக்கொடுக்காது தனது 5 வருட ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்யவுள்ளது.

வடபகுதிக்கு அதிக வருவாயை பெற்றுத்தரக் கூடிய பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் எமது மாகாணம் பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய நிலை உருவாகியிருக்கும் என்பதுடன் எமது தொப்புள்கொடி உறவான தமிழ் நாட்டுடனான உறவுகளையும் மேலும் வலுப்படுத்தியிருந்திருக்கலாம்.

ஆனால் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கையாலாகாத்தனமான பேச்சுக்களையும் இயலாத் தன்மையையும் வெளிப்படுத்தி நிற்பதானது எமது மக்களின் எதிர்காலத்தை மேலும் படுபாதாளத்திற்கே கொண்டு செல்லும் என்பதை மக்கள் இன்று உணரத் தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் எதிர்காலத்தில் பொதுநலம் சார்ந்து தூரநோக்குடன் மக்கள் சிந்தித்து செயற்படும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் மக்களின் அபிலாஷைகளான அபிவிருத்தியையும் அரசியலுரிமையையும் சம நேரத்தில் முன்னெடுத்து வெற்றி கொண்டுதர தன்னால் முடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •