இந்தியாவின் ரூபாவின் வீழ்ச்சி

இந்தியச் செய்திகள் செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய நாணத்தில் ரூ.71.21 ஆக வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனுடன் சேர்ந்து சர்வதேச சந்தையில் காணப்படும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதுடன் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

அந்நியச் செலாவணி சந்தையில் தொடர்ந்து சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த இந்திய அரசாங்கமும் , இந்திய மத்திய வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இறக்குமதியாளர்களுக்கான டொலர் தேவையை ஈடு செய்ய மத்திய வங்கி அதிகளவிலான டொலர்களை சந்தையில் புழக்கத்தில் விட்டு வருகிறது. இதனால், ரூபாய் மதிப்பில் காணப்பட்டு வரும் கடும் வீழ்ச்சி ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாத காரணத்தால் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இது, பங்குச் சந்தைகளிலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் இந்தியாவில் நடைபெற்ற அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் 71.00 ஆக இருந்த ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு 70.80 ஆனது. வங்கிகள் அதிக அளவில் டொலரை புழக்கத்தில் விட்டதையடுத்து, ரூபாய் மதிப்பு 70.71 வரை உயர்ந்தது. இருப்பினும், இந்த நிலை இறுதி வரை நீடிக்கவில்லை. எதிர்பாராத காரணங்களால் வர்த்தகத்தின் இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 சதத்தினால் சரிந்து ரூ.71.21 ஆனது. அந்நியச் செலாவணி வரலாற்றில் ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டது இதுவே முதல் முறை. ஆசிய நாடுகளின் நாணயங்களின் ரூபாய் மதிப்பு மட்டும் தான் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஓராண்டில் ரூபாய் மதிப்பு 11 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தமையே இதற்கு சான்றாக கூறப்படுகிறது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன