எரிபொருள் விலை நிஜாயம் அற்றது மக்கள் கொந்தழிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டணங்களை சீரமைத்தல் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சில போக்குவரத்து சங்கங்கள் இன்று கொழும்பில் கூட்டு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளன.

இதன்போது எரிபொருள் விலை உயர்வு குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் சிற்றூர்ந்து போக்குவரத்து சேவைக் கட்டணத்தை நூற்றுக்கு 5 சதவீதத்தினால் அதிகரிக்க அகில இலங்கை பாடசாலைகள் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இந்தக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்காக அதிக பணம் செலவாகின்றமையினால், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை பாடசாலைகள் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல். மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலைகளை சீரமைப்பதற்காக விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுமாயின், போக்குவரத்து துறைக்கும் விலை சூத்திரம் ஒன்று அவசியமாகும் என அனைத்து மாகாண தனியார் போக்குவரத்து பேருந்து சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக முச்சக்கரவண்டிச் சாரதிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுயதொழில் புரிவோருக்கான தேசிய முச்சக்கரவண்டிச் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முச்சக்கரவண்டிகளுக்காக எரிபொருள் மானியத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கோரியுள்ளார்.