வரி வசூலிக்கும் போது ஏழைகள் பாதுகாக்கப்பட வேண்டும்! கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

முக்கிய செய்திகள் 2

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, வரவு-செலவுத் திட்ட இடைவெளி மற்றும் பொதுக் கடனைக் குறைக்க நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் பொது வருவாய் அதிகரிப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக தொடர்ந்து செயல்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

வரி சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டாலும், அவற்றை அமுல்படுத்தும் போது ஏழை மக்கள் பாதுகாக்கப்படும் வகையில் சமூக பாதுகாப்பு வலை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (20) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இலங்கைக்கு 4 வருட காலத்திற்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியதையடுத்து கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனைத் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட இடைவெளியை வெற்றிகரமாகக் குறைக்க நிறுவன சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது என்று ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான சட்டங்களை சீர்திருத்தம் உட்பட ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் நீடித்திருக்க வேண்டும் என்றும், இலங்கையில் பரந்த ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜோர்ஜீவா கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் முன்னெடுக்கப்படும் இலங்கையின் ஊழல் எதிர்ப்பு மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் மதிப்பீடு வழிகாட்டல் வழங்க வேண்டும் என ஜோர்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்தும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துவது மேம்பாட்டு பங்காளிகளின் தொழில்நுட்ப உதவியுடன் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

பொருளாதாரத் துறையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த, போதுமான அளவு மூலதனமயமாக்கப்பட்ட வங்கி முறையைப் பராமரிப்பது மற்றும் வங்கி மறுமூலதனத் திட்டத்தை செயல்படுத்துவது, நிதி மேற்பார்வை மற்றும் நெருக்கடி மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்துவது முக்கியம் என்று ஜோர்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தை நம்பிக்கையின் மீள் வருகையுடன், அண்மையில் அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட நெகிழ்வான மாற்று விகிதங்கள் நாட்டில் உத்தியோகபூர்வ இருப்புக்களை மீளக் கட்டியெழுப்ப உதவும் என்றும், பணவீக்கத்தைக் குறைப்பதற்கான உத்திகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.