போர்க்குற்றங்களை தடுக்க புதினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீன அதிபருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

முக்கிய செய்திகள் 3

சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரஷியாவுக்கு சென்றார். அங்கு அவர் தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களிடையே மீண்டும் விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனில் நடந்து வரும் போர்க்குற்றங்களை தடுக்க புதினுக்கு ஜின்பிங் அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி இது குறித்து கூறுகையில், "உக்ரைனிய நகரங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்தவும், போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களைத் தடுக்கவும் மற்றும் தனது படைகளை திரும்பப் பெறவும் புதினுக்கு, ஜின்பிங் அழுத்தம் கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆனால் அதற்குப் பதிலாக உக்ரைனின் இறையாண்மை பகுதிக்குள் ரஷிய படைகளை விட்டுச் செல்லும் வெறும் சண்டை நிறுத்தத்துக்கான அழைப்புகளை சீனா மீண்டும் வலியுறுத்தும் என்றும், உக்ரைனில் ரஷிய படைகள் அகற்றப்படுவதை உறுதி செய்யாத சண்டை நிறுத்தம் ரஷியாவின் சட்டவிரோத வெற்றிகளை திறம்பட அங்கீகரிக்கும் என்றும் நாங்கள் கவலைப்படுகிறோம்" என கூறினார்.