புதிய வகை திராட்சைகள் யாழ்ப்பணத்தில் அறிமுகம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் உற்பத்தி செய்யக் கூடிய ஏற்றுமதிக்கான தகுதியான தரத்தில் உயர்ந்த திராட்சையை அறிமுகப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் தற்பொழுது திராட்சையை உற்பத்தி செய்யும் பிரதேசங்களில் ஆகக்கூடிய அறுவடை யாழ் மாவட்டங்களில் கிடைக்கப்பெறுகிறது. இருப்பினும் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சையில் பெரும் தொகை வயின் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இதே போன்று இந்த திராட்சையை பயன்படுத்துவதில் பொதுமக்கள் மத்தியில் ஆககூடுதலான கேள்வி இல்லாததனால் சிறந்த தரத்திலான ஏற்றுமதிக்கு பொருத்தமான திராட்சையை அறிமுகப்படுத்துமாறு யாழ் உற்பத்தியாளர்கள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

இது தொடர்பில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதன் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பெறுபேறாக விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் மஹிந்த அமரவீர திராட்சை தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பான கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

விவசாய திணைக்களம் தற்பொழுது திராட்சை தொடர்பில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. அத்தோடு எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய விசேட திராட்சையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த ஆய்வு பணிகளை கிளிநொச்சியில் அமைந்துள்ள விவசாய ஆய்வு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்வதற்கு காரணம் திராட்சை உற்பத்திக்கு பொருத்தமான மண் வளம் மற்றும் காலநிலை அந்த பிரதேசத்தில் நிலவுவதாகும்.

இதற்கமைவாக மிக விரைவாக யாழ் பிரதேசத்தில் உற்பத்தி செய்யக்கூடிய திராட்சையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.