பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பிரதமருடன் கல்வி அதிகாரிகள் கலந்துரையாடல்

செய்திகள்

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கபடும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு பிரதமர் அவர்களால் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தி அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட குழந்தை மருத்துவர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் பாடசாலைகளை மீள திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என கௌரவ பிரதமர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டமொன்று செயற்படுத்தப்படின் அதன்போது தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்தார்.

Trending Posts