எரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன? அமைச்சர் உதய கம்மன்பில விலை ஏற்றத்தை அறிவித்ததன் நோக்கம் என்ன?

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

எரிபொருள் விலை ஏற்றத்திற்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கும் மேலும் பல விலை ஏற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பதில் வழங்கும் வகையில் இன்றைய ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டபாய  ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தீர்மானத்தை மாத்திரமே நான் அறிவித்தேன். எனவே பதவி விலக வேண்டியது நானல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில , ஆளும் கட்சியின் தலைவருக்கு சவால் விடுக்கும் அளவில் சாகர காரியவசம் உள்ளமை குறித்து பல சந்தேகங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கூடிய வாழ்க்கை செலவு குறித்த அமைச்சரவை உப குழுவின் அனுமதியுடனேயே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டத்தின் படி நிதி அமைச்சரின் அனுமதியுடனேயே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கமைய கடந்த 9 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதற்கமையவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

நிதி அமைச்சராக பதவி வகிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்குபற்ற முடியாமையின் காரணமாகவே அவரின் பிரதிநிதியாக , நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அதில் கலந்து கொண்டிருந்தார். அவ்வாறெனில் சாகர காரியவசம் குற்றஞ்சுமத்துவது என்மீது அல்ல. அவரது கட்சியால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும் , அந்த கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதுமே சாகர காரியவசம் குற்றம் சுமத்துகின்றார்.

வரலாற்றில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சரே அறிவித்துள்ளார். வலு சக்தி அமைச்சரொருவர் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களில் அறிவித்ததில்லை. ஜனாதிபதியையும் பிரதமரையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நான் அந்த சவாலை ஏற்று ஊடக சந்திப்பில் அறிவித்தேன்.

எனினும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை வெளியிட்டு அவருக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார். ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு சாகர காரியவசம் பாரதூரமான தவறிழைத்திருக்கிறார். அவ்வாறெனில் தற்போது பதவி விலக வேண்டியது நானா? அல்லது சாகர காரியவசமா? இதனை தீர்மானிக்க வேண்டியது அறிவுடைய மக்களின் பொறுப்பாகும்.

இது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி ரீதியில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் என்னிடம் தெரிவித்தனர். எனவே உண்மையில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை முடிந்தால் பகிரங்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார். 

எனவே பதவியில் இருந்து தாம் விலகுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால் முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சகார காரியவசத்திற்கு அமைச்சர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.

Trending Posts