வடமாகாண பிரதம செயலாளர் மீது தெல்லிப்பழை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பாரிய குற்றச்சாட்டு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் வடமாகாண பிரதம செயலாளரின் செயற்பாடானது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமையப் பெறவேண்டிய அதி தீவிர சிகிச்சை நிலையத்தினை இவ்வருடத்தினுள் ஆரம்பிப்பதற்கு முட்டுக்கட்டை போடுவது, வைத்தியசாலையை நாடி வரும் மக்களின் நலனில் அக்கறை இல்லாத செயற்பாடாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழைக் கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை யாழ்.மாவட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக மக்களிற்கான சேவையை வழங்கி வருகிறது. வலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேற்றம் நடைபெற்ற பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தேவையும் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் ஐந்து வைத்திய அதிகாரிகளுடன் இயங்கிய வைத்தியசாலை தற்போது அறுபது வைத்திய அதிகாரிகளுடன் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தவருட இறுதியில் உள்ளகப் பயிற்சி வைத்தியர்களும் சேவையில் இணைத்து கொள்ளப்படவிருப்பதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இந்த வருடம் நிர்மாணிப்பதென திட்டமிடப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவானது வடமாகாணப் பிரதம செயலாளரின்ன் தலையீட்டினால் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டுமே அதிதீவிர சிகிச்சைப்பிரிவு உள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள கொரனாப் பெருந் தொற்றானது நாடு முழுவதும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன் புதிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் உருவாக்கத்திற்கான தேவையையும் அதிகரித்துள்ளது.

மேலும் வைத்தியர்களுக்கென அமையப் பெறவுள்ள விடுதியின் குறிப்பிட்ட ஒரு தொகுதிக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றாளர்களின் சிகிச்சைப் பிரிவுக்கென வைத்தியர்களின் இரு விடுதிகளை வைத்தியர்கள் வழங்கியுள்ளனர்.மூன்றாவது விடுதியும் COVID 19 தொற்றுக்குள்ளான சிறுபிள்ளைகளை சிகிச்சை வழங்குவற்காக மாற்றம் செய்யப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் வடமாகாண பிரதம செயலாளரின் இச் செயற்பாடானது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமையப் பெறவேண்டிய அதி தீவிர சிகிச்சை நிலையத்தினை இவ்வருடத்தினுள் ஆரம்பிப்பதற்கு முட்டுக்கட்டை போடுவது, வைத்தியசாலையை நாடி வரும் மக்களின் நலனில் அக்கறை இல்லாத செயற்பாடாகும்.

இதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழைக் கிளை தனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் இவரது தன்னிச்சையான செயற்பாடுகள் இவரைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்கவிருக்கும் பிரதம செயலாளர் தமது பணிகளை மேற்கொள்ளப் புதியவருக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts