யாழில் 500 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடி வேள்வி : ஒருவர் கைது இன்னொருவர் தப்பியோட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அல்வாய் வடக்கு விருமார் கோயில் பொங்கல் மற்றும் வேள்வி நிகழ்வு 500 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடி தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காமல் வேள்வி நடத்தியுள்ளனர்.

சுகாதார பகுதியினரின் அனுமதிகள் எதுவும் பெறப்படாது தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்றுகூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவதையடுத்து விறுமர் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பருத்தித்துறை சுகாதர மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர்களும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் சட்ட விதிமுறைகளை மீறுவதற்கு காரணமாயிருந்த கோயில் நிர்வாகியும் அதனோடு இணைந்து செயல்பட்ட ஏனைய 30 பேரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தப்பட்டபர்.

அத்துடன் ஆலய நிர்வாகி மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்களதும் பொலிஸாரதும் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த அப்பகுதி இளைஞர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அவர் தொடர்பான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை கொண்டு அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக ஒன்றுகூடல்களை மேற்கொள்வதால் அதிகளவான நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு தேவையற்ற இழப்புகளை சமூகம் எதிர்நோக்க வேண்டிவரும் என சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts