கியூபாவின் அதீத செயற்திறன் கொண்ட கொவிட் தடுப்பூசி

செய்திகள்

கியூபாவின் அப்டலா கொவிட் தடுப்பூசி (Abdala) 92% செயற்திறன் கொண்டது என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கியூபா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியூபாவின் முதலாவது தடுப்பூசியான சொபெர்னா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 10 மாதங்களுக்கு பின்னர் அப்டலா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவத் துறையில் பாரிய தாக்கம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயோ கியூபா பார்மா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அப்டலா தடுப்பூசியின் மூன்று செலுத்துகைகளை பெறுவதன் மூலம் சிறந்த பெறுபேறை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கியூபாவில் பயன்பாட்டில் உள்ள சொபெர்னா 2 (Soberana 2) கொவிட் தடுப்பூசியை மூன்று முறை செலுத்துகைகள் வழங்கப்படும் என்றும் அவற்றில் இரண்டு செலுத்துகைகள் 62% செயற்திறனை வழங்கக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவில் தயாரிக்கப்படும் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு வெனிசூலா, வியட்நாம், ஆர்ஜென்டினா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முன்னதாக குறித்த தடுப்பூசிகளை ஈரான் உற்பத்தி செய்துள்ளதுடன், தற்போது அதனை பரீட்சித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கியூபாவில் கொவிட் தொற்றாளர்கள் 169,365 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொவிட் தொற்றினால் 1,170 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts