அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாங்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பது, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கடமையாகும்.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்தல், அதிக விலையை அறவிடல் மூலம், நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தை முறைகேடுகளைத் தடுக்க, பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆம் பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் தொடர்புடைய அவசரகாலச் சட்ட விதிமுறைகள், வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த உத்தரவின் கீழ், தங்கள் கடமைகளைச் செய்யத் தேவையான பிரதி ஆணையாளர்கள் அல்லது உதவி ஆணையாளர்களை, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளரினால் நியமிக்க முடியும்.

அத்தியாவசியச் சேவைகள் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, பிரிவு 5இன் உத்தரவின் கீழ் நியமிக்கப்பட்ட எந்தவொரு தகுதிவாய்ந்த அதிகாரிக்கும், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் உத்தரவு பிறப்பிக்கலாம். இவ்வாறு வழங்கப்படும் அனைத்து உத்தரவுகளுக்கும் இணங்கிச் செயற்படுவது, உரிய அதிகாரியின், பதவி வகிப்பவரின் அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரியின் கடமையாகும்.

அந்த வகையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணும் வகையில், நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களின் விநியோகத்தை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி அதிகாரம் அளித்துள்ளார்.

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் மாவட்டச் செயலாளர்களுக்குப் பணிப்புரை வழங்க முடியாது என்று கூறி மக்களைப் பிழையாக வழிநடத்தும் வகையில், எதிர்க் கட்சியினரால் நேற்றைய (06) பாராளுமன்ற அமர்வின் போது கருத்து வெளியிட்டமை தவறாகும்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கும் முழுமையான அதிகாரம், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உள்ளதென, ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.