வட்டுக்கோட்டை மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பலால் வாள்வெட்டு

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (2021.09.19) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று, நேற்று இரவு 7 மணியளவில் முதலிய கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அத்துடன் வேலிகளின் தகரங்கள் அடித்து பிடுங்கப்பட்டு வீடு ஒன்றின் கதவினையும் குறித்த வன்முறை கும்பல் அடித்து உடைத்துள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளது.

வாள்வெட்டிற்கு இலக்கான குடும்பஸ்தர் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் குறித்த பகுதிக்கு வந்து பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை செய்துவிட்டு சென்றனர்.

அதன் பின்னர் மீண்டும் அப்பகுதிக்கு வந்து வன்முறைக் கும்பல் இன்னொரு முதியவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் சைக்கிள் கடை, தையல் கடை போன்றவற்றின் மீதும் தாக்குதல் செய்துவிட்டு தப்பித்துச் சென்றது.

அதன் பின்னர் பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த பகுதிக்குச் சென்று தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் கடமையாற்றுபவர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டில் பல சாராயப் போத்தல்களும் பல பியர் ரின்களும் காணப்பட்டன.

இந்த வன்முறைக்குழு இதற்கு முன்னரும் இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.