நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் ஆராய வேண்டும் – சி.தவராசா

செய்திகள் முக்கிய செய்திகள் 3

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் எத்தனைபேர் இரட்டைப் பிரஜா உரிமை பெற்றுள்ளனர் என்பதனை நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் உடன் வெளியிட்டு நாட்டில் பேசப்படும் கூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டுமென வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பின் அது 19வது திருத்தச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்ற சர்ச்சை தற்போது அதிக பேசுபொருளாகவுள்ளதுடன், ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வாறு இருப்பதாக கூறியதற்கமைய வழக்கிடப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் பதவி இழகப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டு அது தற்போது உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.

எனவே நாட்டில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் இரட்டைப் பிரஜா உரிமையை உடையவர்கள் எத்தனைபேர் எனவும் அவர்கள் யார் என்ற பெயர் விபரங்களையும் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் உடன் வெளியிட்டு நாட்டில் பேசப்படும் கூற்றுக்களிற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும். ஏனெனில் தற்போது நாட்டில் உள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் யாரும் கோரிப் பெறமுடியும் எனவே இதனை வெளியிடுவது ஓர் பாரதூரமான விடயமாக கருதப்படமாட்டாது.

இதேநேரம் மாகாண சபை உறுப்பினர்களிற்கும் இது பொருந்துமா என்பது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது. அவ்வாறு மாகாண சபை உறுப்பினர்களிற்கும் பொருந்தும் என வருமாக இருந்தால் அப்போது மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பிலும் குறித்த விபரங்களை கோரிப் பெறமுடியும். அதேநேரம் கடந்த பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்பே மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலில் இரட்டைப் பிரஜா உரிமையை உடையவர்களை உள்வாங்கியமை கட்சித் தலமைகளின் தவறாகும்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட ஓர் வேட்பாளரான மு.சந்திரகுமார் பிரித்தானிய குடியுரிமை கொண்டவராக கானப்பட்டார். இருப்பினும் உடனடியாக தான் பிரித்தானிய குடியுரிமையை இரத்து செய்வதாக பிரித்தானிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு எழுத்தில் அறிவித்து அங்கிருந்து ஏற்றுக்கொண்டதான பதிலைப் பெற்றதன் பின்னரே போட்டியிட்டார். இதனை ஏனைய வேட்பாளர்களும் கையாண்டிருக்க வேண்டும்.

எனவே இவ்வாறு செய்யத் தவறி தகவலை மறைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள அனைவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிக்கப்படுவதோடு இவ்வளவு காலமும் பெற்ற வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளையும் மீள அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.