பந்துவீச்சில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா மிரட்டலாக உள்ளது: இந்திய முன்னாள் பயிற்சியாளர்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

மும்பை, ஜுன் 05

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 2013-க்குப்பின் ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இந்த போட்டி இந்திய ரசிகர்ளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஷமி, சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்தால் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய பந்து வீச்சு கூட்டணி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- இரு அணிகளின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை பாருங்கள்.

அதில் யார் சிறந்ததை கொண்டிருக்கிறார்கள்? ஒருவேளை பும்ரா இருந்தால் ஷமி, சிராஜ் ஆகியோரை கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு சமமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவை நீங்கள் பார்க்கும் போது ஹேசல்வுட் காயத்தால் வெளியேறினாலும் கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இருக்கிறார்கள்.

மேலும் ஹேசல்வுட்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட மைக்கேல் நீசர் சமீபத்திய கவுண்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஸ்காட் போலாண்ட் தான் சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். குறிப்பாக சமீபத்திய ஆஸ்திரேலிய தொடர்களில் பிட்ச்சில் லேசான உதவி கிடைத்தால் அவர் மற்றவர்களை காட்டிலும் ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த பவுலராக செயல்படும் தன்மையை கொண்டதை நாம் பார்த்தோம். எனவே அவர் நிச்சயமாக ஹேசல்வுட் இடத்தை நிரப்புவார். இவ்வாறு அவர் கூறினார்.