தோட்ட தொழிலாளர்களை தோட்ட பிரஜைகள் என அழைக்க வேண்டும்; சஜித்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மலையக தேயிலை தொழிலாளர்களை தோட்டத் தொழிலாளர்கள் என அழைப்பதைத் தவிர்த்து, தோட்டப் பிரஜைகள் என அழைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று நாடாளுமன்றில் யோசனை முன்வைத்தார்.

நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச இன்றைய தினம் உரையாற்றியபோது, இந்த கருத்தை முன்வைத்தார்.

2022ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கையின் பிரகாரம், நாட்டில் தேயிலை உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் சேதன உரப்பாவனை நாடகமும், உலக சந்தையில், தேயிலைக்கு அதிக விலை நிலவியபோதிலும், தேயிலை உற்பத்தியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாலும், விலை உயர்வின் இலாபம், தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

பெருமளவான தேயிலைத் தோட்டங்கள் உரிய முகாமைத்துவம் இன்மையால் காடுகளாகி, விலங்குகளினால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதாக அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு, தொழில்நுட்ப காரணிகளால் புறக்கணிக்கப்படும், அரசியல் வாக்குறுதியாகி உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கொடுப்பனவுகளை ஒன்றுசேர்த்தால், அது நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில், வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமானதல்ல.

கடந்த பாதீட்டின் மூலம், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம், தோட்டப் பிரஜைகளுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா?

இதனால், பெருமளவான ஆண் தொழிலாளர்கள், தோட்டத் தொழில்துறையிலிருந்து வெளியேறிவிட்டார்கள் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளதா?

தோட்டப் பிரஜைகளுக்கு, கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கத்தின் தலையீடு போதுமானது என நீங்கள் கருதுகின்றீர்களா?

நிரந்தர காணி, வீடுகளின்றி குறைந்த வசதிகளுடன் மிகவும் துன்பமான வாழ்க்கையை வாழும் மக்களுக்கு, தமது வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு, ஆகக்குறைந்த வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?

எதிர்க்கட்சியில் உள்ள பெருந்தோட்டப் பிரஜைகளின் பிரதிநிதிகளுக்கு, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள், செயற்படுத்தப்படவில்லை.

அவை எப்போது நடைமுறைப்படுத்தப்படும்?

அரசாங்க முகாமைத்துவத்தின்கீழ் இருந்த பல தோட்டங்கள், நீண்டகால குத்தகை அடிப்படையில், பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டபோது, இருந்த அடிப்படை நோக்கம் என்ன?

அந்த நோக்கங்கள், தொடர்ந்தும் பாதுகாக்கப்படுகிறது என நீங்கள் கருதுகின்றீர்களா? என சஜித் பிரேமதாச வினவினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்தக் கேள்வியில் தாம் தோட்டத் தொழிலாளர்கள் எனக் குறிப்பிட்டுள்ளதால், மன்னிப்பு கோருவதாக கூறினார்.

தோட்டத் தொழிலாளர்கள் என்ற பதத்தை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், அது அவர்களின் சமூக ரீதியான அந்தஸ்தை கீழிறக்கும் பதமாகும்.

ஆதலால், தோட்டப் பிரஜைகள் என கூற விரும்புகிறேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதையடுத்து, குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஆயிரம் ரூபா சம்பளம் தற்போது போதுமானதல்ல என்றபோதிலும், அதனைப் பெற்றுக்கொடுக்க தமது அரசாங்கமே நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காத நிறுவனங்களுக்கும், அதனை வழங்குமாறு தாங்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்கும் இந்த துன்பியல் வாழ்வு தொடர்பில், இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் கவலைப்பட வேண்டும்.

அவர்கள், இந்த நாட்டில் மிகவும் துன்பியல் வாழ்வை வாழும் மக்கள்.

எங்களுடைய பொறுப்பை, நாங்கள் தட்டிக்கழித்துள்ளோம்.

அவர்களின், வாழ்க்கைத் தரம் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.

1992ஆம் ஆண்டு, ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில், பெருந்தோட்டங்கள், மிகவும் பலவீனமான குத்தகை ஒப்பந்தத்தில், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது மிகவும் கடினமானதாகும்.

1992ஆம் ஆண்டு நான்கரை இலட்சமாக காணப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக, தற்போது ஒன்றரை இலட்சமாக குறைவடைந்துள்ளது.

நிறுவனங்கள், தங்களின் சேவையாளர்களை கவனிப்பதில்லை.

உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.

அரசாங்கத்தின் ஒதுக்கீட்டின் மூலம் பாதைகள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் என்பன அமைக்கப்படுகின்றன.

தோட்ட நிறுவனங்கள், தங்களின் பொறுப்பை தட்டிக்கழித்துள்ளன.

பெருந்தோட்டத்துறையில் தற்போது 23 சதவீத தேயிலை உற்பத்தியே இடம்பெறுகின்ற நிலையில் எஞ்சிய 77 சதவீத தேயிலையை சிறுதோட்ட உரிமையாளர்களே உற்பத்தி செய்கின்றனர்.

தோட்ட நிறுவனங்கள் தொடர்பிலும் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பது தொடர்பிலும் பிரச்சினை உள்ளது.

மிகவும் பலவீனமான குத்தகை ஒப்பந்தம் மூலம் 1992 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையே, இந்த நிலைமைக்கான அடிப்படைக் காரணமாகும்.

இந்தநிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பயிரிடப்படாத நிலங்களை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கி அவர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தை தொடர தாம் விரும்புவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.