32 அணிகள் பங்கேற்கும் 9-வது பெண்கள் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகின்ற ஜூலை 20 ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 40 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், இந்த பெண்கள் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுவரை 10 இலட்சத்து 3 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இது கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலக கிண்ண பெண்கள் கால்பந்தாட்ட போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
இது குறித்து சர்வதேச கால்பந்தாட்ட சங்க தலைவர் ஜியானி இன்பான்டினோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்த ஆண்டு நடத்தும் 9-வது பெண்கள் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான டிக்கெட் விற்பனை 10 இலட்சத்தை தாண்டி விட்டது என்பதை எல்லோருடனும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இது கடந்த (2019 ஆம் ஆண்டு) உலக கிண்ண போட்டியின் போது விற்பனையான டிக்கெட் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
அதிக இரசிகர்கள் பார்த்த பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியாக இது சாதனை படைக்க இருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.