இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்திய கோர தாக்குதல் எதிரொலியாக, அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. தொடர்ந்து தாக்குதலை மற்றும் பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் சூழலில், காசாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் தலைமையகம் அமைந்த பகுதியில், அதன் அடியில் சுரங்கம் ஒன்றை கண்டறிந்து உள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால், பாலஸ்தீனர்களுக்கான முக்கிய நிவாரண அமைப்பை, ஹமாஸ் அமைப்பினர் தவறாக பயன்படுத்தியதற்கான புதிய சான்று கிடைத்துள்ளது என்று இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் பணியாளர்கள் சிலர் ஹமாஸ் அமைப்புக்காக உளவு வேலை செய்துள்ளனர் என இஸ்ரேல் கடந்த மாதம் அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. இது பல நாடுகளை அதிர்ச்சி அடைய செய்தது.
இதனை தொடர்ந்து, ஐ.நா.வுக்கு வழங்கி வந்த நன்கொடையை சில நாடுகள் அடுத்தடுத்து முடக்கி வைத்தன. இதுபற்றி பணியாளர்களிடம் உள்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா.வும் அறிவித்தது.
இந்த சூழலில், அதன் தலைமையகம் அமைந்த பகுதியில், அதன் அடியில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கம் இருப்பது கண்டறியப்பட்டது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், நாடுகளிடம் நிதியுதவி பெறுவதில் நெருக்கடியான சூழலில், மற்றொரு சிக்கலையும் ஐ.நா. எதிர்கொண்டு உள்ளது.
அந்த சுரங்கம் ஒரு நபர் நடந்து செல்லக்கூடிய அளவுக்கு உயரத்துடன் உள்ளது. அதுபற்றிய வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது. உள்ளே, மின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. ஐ.நா.வின் பள்ளிக்கூடம் அருகே அமைந்த இந்த சுரங்கத்திற்குள் பெரிய மின்கலன்களும் வைக்கப்பட்டு உள்ளன.
அதில், மின்சாரத்திற்காக தனி அறை அமைத்து, அதன் வழியே தேவையான இடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுவதும் தெரிந்தது. பயங்கரவாதிகள் இந்த கட்டமைப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். சுரங்க வாசல் மற்றொரு புறத்தில், ஐ.நா.வின் வளாக பகுதிக்குள்ளேயே முடிகிறது.
அதனை சுற்றி பெரிய, பெரிய கட்டிடங்களும் அமைந்துள்ளன. ஐ.நா. தலைமையகத்தின் செர்வர் அறையில் உள்ள கட்டமைப்பில் இருந்து, சுரங்கத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஐ.நா. பணியாளர்கள் செயல்படுகின்றனர் என்று இஸ்ரேல் கூறிய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.