பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதியால் 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (09) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளரின் பங்கேற்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கையை நாம் இணைந்து முன்னெடுத்துள்ளோம்.
தேசிய ரீதியிலான 86 சதவீதமானோருடன் ஒப்பிடுகையில், பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களில் 8 சதவீதமானோருக்கு மாத்திரமே சொந்த வீடு காணப்படுகிறது. இந்த வரலாற்று அநீதியை நாம் சரி செய்வோம்.
அரசாங்க அதிகாரிகள், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
பொருத்தமான காணிகள் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணுதல், வரைபடமிடுதல், அளவீடு செய்தல், பத்திரங்களை தயாரித்தல் போன்ற நடைமுறைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
அந்த வகையில் குறித்த திட்டத்தின் மூலம் 200 000 குடும்பங்களைச் சேர்ந்தர்கள் பயனடைவார்கள். அதற்கான செயல்முறையை ஒருங்கிணைக்க ஒரு செயலகத்தை அமைக்கப்பதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டதோடு, இந்த வேலைத்திட்டத்துக்காக ஜனாதிபதியினால் 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
200 வருடங்களாக எமது பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்ட சமூகம் வாழ்வதற்கு ஒரு இடம் என்ற எளிய பாதுகாப்பைக் கூட அனுபவித்ததில்லை.
இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்குள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் அனுபவிப்பதை இந்த முயற்சி உறுதி செய்கிறது. இது அவர்களின் சொந்த நிலத்தின் உறுதியையும் பாதுகாப்பையும் அவர்களின் எதிர்காலத்தில் ஒரு பங்கையும் கொடுக்கும். எனவே இதனை வழங்குவதில் நான் உறுதியாகவுள்ளேன்.